தாமிர பரணி பெயர் காரணம்
தாமிர பரணியானது நெல்லைச்சீமையில் பாய்ந்தோடும் ஒரு வ்ற்றாத ஜீவ நதியாகும். "தாமிரம்" என்றால் "செம்பு" அல்லது "செப்பு" என்று பொருள். செம்பு ஒரு சிவப்பு நிற உலோகமாகும்."பரணி" என்பதற்கு "பாத்திரம்" என்று பொருள்."தாமிரபரணி" என்றால் செப்புப்பாத்திரம் என்று பொருள்படுகிறது.பரண் என்றால் தாங்கிப்பிடிப்பது என்று பொருள்.பாத்திரம் நீரைத்தாங்கிப்பிடிக்கிறது,இதனால் பரணி என்ற சொல்லுக்கு பாத்திரம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
பரணி என்ற சொல்லுக்கு யோனி என்றும் ஒரு பொருள் உள்ளது.யோனியும் சிவப்பு நிறமுடையதாகும்.யோனி மனிதவித்து நீரை தாங்கிப்பிடிக்கிறது. யோனியிலிருந்துதான் மனிதன் தோன்றுகிறான்.எனவே ஆதி மனிதன் தோன்றிய இடம் தாமிர பரணி பாயும் இடம் என்ற கூற்று உண்மையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து தாமிர பரணி தோன்றியதாக புராணக்கதைகளில் கூறப்படுகிறது.கமண்டலம் ஒரு செப்புப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
"தாமிரபரணி" என்றால் சிவந்த இலைகளையுடைய மரம் என்றும் ஒரு பொருள் கூறப்படுகிறது. பொதிகை மலையில் "தாமிரபரணி" உற்பத்தியாகும் இடத்தில் சிவந்த இலைகளையுடைய மரங்கள் காணப்படுகின்றன.தாமிர பரணி பாய்ந்தோடும் பகுதி செம்மண் நிறைந்த பூமி என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத நாட்டில் பாய்ந்தோடும் பன்னிரு புஷ்கர நதிகளில்(புண்ணிய நதி) தாமிர பரணியும் ஒன்றாகும்.தாமிர பரணி ஒரு இரட்டை நதியாகும்.அதில் ஒரு பிரிவு கேரளத்திற்குள் பாய்கிறது,ஒரு பிரிவு தமிழகத்திற்குள் பாய்ந்து நெல்லைச்சீமையை வளமாக்குகிறது.இந்நதி பல இடங்களில் தன் திசையை மாற்றிக்கொண்டு ஒடுகிறது.முறப்ப நாடு என்னும் இடத்தில் வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது.பாரத நாட்டில் வடக்கிலிருந்து தெற்காக பாயும் நதிகள் இரண்டு மட்டுமே. கங்கை நதி காசியில் வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது.அதைத்தவிர தாமிர பரணி மட்டுமே வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது.எனவே தாமிர பரணிக்கு தென் கங்கை என்று பெயர்.காசிக்குச்சென்று கங்கையில் குளிக்கமுடியாதவர்கள்,முறப்ப நாடு சென்று தாமிர பரணியில் குளிக்கலாம்.
`"தாமிரபரணி" என்பது ஒரு வடமொழிச்சொல்.இதன் தமிழாக்கம் "பொறுணை" என்பதாகும்."பொறு" என்றால் "தாங்கு" என்று பொருள். நெல்லை வட்டார வழக்கில் "தாங்கிக்கொள்" என்றால் "பொறுத்துக்கொள்" என்று பொருள்.தாமிர பரணியில் நூற்றுக்கணக்கான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.இதுபோன்று வேறு எங்கும் காணமுடியாது.
-
No comments:
Post a Comment